/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கொடிகட்டிப் பறக்குது, "குழந்தை கடத்தல்' தொழில் : சென்னையைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் கைதுகொடிகட்டிப் பறக்குது, "குழந்தை கடத்தல்' தொழில் : சென்னையைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது
கொடிகட்டிப் பறக்குது, "குழந்தை கடத்தல்' தொழில் : சென்னையைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது
கொடிகட்டிப் பறக்குது, "குழந்தை கடத்தல்' தொழில் : சென்னையைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது
கொடிகட்டிப் பறக்குது, "குழந்தை கடத்தல்' தொழில் : சென்னையைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது
ADDED : மே 21, 2010 01:14 AM
கிருஷ்ணகிரி: குழந்தையை கடத்திய மூன்று பெண்கள் உள்ளிட்ட நான்கு பேரை, கிருஷ்ணகிரி போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையை சேர்ந்த ரமேஷ் மனைவி ராமக்கா (40). இவருக்கு, நான்கு மாதத்திற்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் தலை வளர்ச்சி சீராக இல்லாத நிலையில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் மாதத்தில் ஒரு நாள் வந்து சிகிச்சை பெற்று வந்தனர்.
கடந்த 18ம் தேதி, ராமக்கா குழந்தையுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின், புதிய பஸ் ஸ்டாண்ட் செல்ல அரசு மருத்துவமனையில் இருந்து டவுன் பஸ்சில் ஏறினார். அப்போது, பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த பெண், ராமக்காவின் குழந்தையை வாங்கி, மடியில் வைத்துகொண்டு பயணம் செய்தார். பஸ் புதிய பஸ் ஸ்டாண்ட்டுக்கு வந்த போது, குழந்தை வைத்திருந்த பெண்ணை காணவில்லை. போலீசார் விசாரித்த போது, ராமாக்கா, பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணின் கை மற்றும் உடல் பாகங்களில் தீக்காயம் இருந்ததாக தெரிவித்தார். இதன் அடிப்படையில், கிருஷ்ணகிரி கிருஷ்ணன் கோவில் தெருவில் உடலில் தீக்காயங்களுடன் வசிக்கும் தனலட்சுமியை, போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், ராமக்காளிடம் இருந்து குழுந்தையை கடத்திச் சென்றது அவர் தான் என்பது தெரிந்தது. குழந்தை கடத்தலில், சென்னையை சேர்ந்த கும்பலுக்கு தொடர்பு இருப்பதும் தெரிந்தது.
தனலட்சுமி, இரு ஆண்டுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட தகராறில், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். தீக்காயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, பக்கத்து, "பெட்'டில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பூர் மதுரசாமி மடம் பகுதியை சேர்ந்த ராணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ராணி மூலம் பெரம்பூரில், "தென் இந்திய பொது நலச்சங்கம்' என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் கிரிஜா(45), தனலட்சுமிக்கு நட்பானார். ராமக்காளிடம் இருந்து குழந்தையை கடத்தி சென்ற தனலட்சுமி, கிரிஜா மற்றும் ராணிக்கு மொபைல்போன் மூலம் தகவல் கொடுத்தார். குழந்தையை வாணியம்பாடிக்கு எடுத்து வர கிரிஜாவும், ராணியும் கூறியுள்ளனர். லால்பாக் ரயிலில் ஏறி, இரண்டு பேரும் வாணியம்பாடி வந்தனர். அங்கு குழந்தையுடன் காத்திருந்த தனலட்சுமி, இரண்டு பேரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு, "அட்வான்ஸ்' தொகையாக ஆயிரம் ரூபாய் வாங்கி கொண்டு கிருஷ்ணகிரி வந்து விட்டார். குழந்தையை எடுத்து சென்ற கிரிஜா மற்றும் ராணி ஆகியோர், குழந்தையை விற்பனை செய்யும் வேலையில் இறங்கினர். இதனிடையே, தனலட்சுமியுடன் சென்னை சென்ற தனிப்படை போலீசார், பெரம்பூர் சென்று, கிரிஜா, அவர் கணவர் ஆட்டோ டிரைவர் சிவன் (48) மற்றும் ராணி ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த குழந்தையை மீட்டனர். கிரிஜா தொண்டு நிறுவன தலைவியாக செயல்படுவதால், சென்னை பெரம்பூரில் வி.ஐ.பி.,யாக வலம் வந்துள்ளார். கிரிஜாவுக்கு குறிப்பிடும்படியாக தொழில் ஏதும் இல்லாத நிலையில் எப்போதும் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாகவும் அவருக்கு எங்கிருந்துபணம் வருகிறது என்பது தெரியவில்லை என்றும் பெரம்பூர் போலீசார், கிருஷ்ணகிரி தனிப்படை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட கிரிஜா மற்றும் ராணி ஆகியோர், குழந்தைகளை கடத்தி கேரள மாநிலத்துக்கு அனுப்பியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அதனடிப்படையில் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.